கேது பகவான் வணக்கம்
"பொன்னைய னுரத்திற்
கொண்டோன்
புலவர்தம் பொருட்டாலாழி
தன்னையே கடைந்து முன்னந்
தண்ணமு தளிக்கலுற்ற
பின்னை நின் கரவாலுண்ட
பெட்பினாற் சிரம்
பெற்றுய்ந்தா
யென்னையாள் கேதுவேயிவ்
விருநிலம் போற்றத்தானே.'
கேதுவின் புராணச் செய்திகள்
இவர் ராகுவின் உடலிலிருந்து தோன்றியவர். அதாவது தேவர் வடிவுகொண்ட ராகு அமிர்தத்தை உண்டபோது, சூரியன், சந்திரன் தூண்டுதலால் சினம்கொண்ட திருமாலாகிய மோகினி, தன் சட்டுவத்தால் ராகுவை பலம்கொண்டு தாக்கினார். ராகுவின் தலை வெட்டுண்டு விழுந்தது.
கைகளும் இற்றுப்போயின. தலையினோடு பாம்பு சேர ராகுவானார்.
வெட்டுண்ட ராகுவின் உடல் பொதிகை மலைச்சாரலில் விழுந்தது. அதை "மின' என்ற அந்தணர் கண்டெடுத்துப் பாதுகாத்துவந்தார். அமிர்தம் உண்ட உடலானதால் அழியாமல் வளர்ந்தது. தலையிழந்த உடலில் பாம்பின் தலைவந்து இணைந்துகொண்டது. இதுவே கேதுவாகும்.
கேதுவின் மனைவி சித்திரலேகா என்பவள். இவர்களுக்கு எட்டுப்பிள்ளைகள் தோன்றினர். அவர்களில் சிறப்புடையவன் அவமிருது என்பவன்.
கேது திருமாலை நோக்கித் தவமிருந்து சாயாகிரகம் பதம் பெற்றார். பத்து குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவார்.
கேது பாம்புத்தலையும் அசுரஉடலும் கொண்டவர். இருகைகள் உடையவர். வலக்கையில் கதையும், இடக்கையில் வரதமும் கொண்டவர். மஞ்சள் முதலிய பலவண்ண உடை தரித்தவர். எந்நிறமும் தன் நிறமாகக் கொள்ளும் குணவான்.
கோவில்களில் கேதுவைத் தனியே வைத்தும், நவகிரகங்களோடு சேர்த்தும் வழிபடுபவர். கேது தன்னை வழிபடுவோருக்கு சகல பீடைகளையும் நீக்குபவர். தைரியம் தருபவர்.
கேது சார்ந்த ஜோதிடக் குறிப்புகள்
நவகிரகங்களில் ராகுவுக்கு நிகராக கொடுமை புரியும் இவரும் ஒரு ராசியை ஒன்றரை ஆண்டுகளில் கடப்பார்.
ராகுவைப்போலவே மற்ற ராசிகளுக்கு எதிர்ப்புறமாகவே இயங்குபவர் இவர். ஆணும் பெண்ணுமற்ற அலித்தன்மை பெற்றவர்.
ராசி மண்டலத்தில் இவருக்கென உரிமையுடைய ராசி எதுமில்லை. என்றாலும் தான் உலாவும் ராசியையும், அதற்குரியவர் தன்மையையும் பெற்றுப் பலனளிக்கக்கூடியவர்.
விருச்சிகத்தில் உச்சமும், ரிஷபத்தில் நீசமும் பெறுவார். மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளைப் பகையாகவும்; மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளை நட்பாகவும் கொண்டவர். இவர் செவ்வாயின் அருளுடையவர் என்பதனால், 4, 7, 8-ஆம் இடங்களைப் பார்க்கவும் கூடியவர்.
வடமேற்கு திக்கிலும் இரு காலங்களிலும் வலிமைபெறும் இவர் அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களைத் தன் பொறுப்பில் கொண்டுள்ளார்.
மோட்சத்திற்கு வழிகாட்டுபவர். உடலில் கண்களைப் பாதுகாக்கும் இவர் தொழுநோய்க்கும், விஷக்கடிக்கும் காரணமாவார். இவருடைய தசை நடைபெறும் காலங்கள் ஏழு ஆண்டுகள்.
கேது பகவான் ஜாதகத்தில் 3, 6, 10, 11-ல் இருந்து தசை நடைபெற்றால் பொன், தனம், பொருள், பூமி, வாகன லாபம், புகழும் வந்தடையும். மனைவி, மக்களால் மகிழ்ச்சி உண்டாகும். கேந்திரத்தில் பலப்பட்டிருந்தால் உரிமையிலா சொத்து வந்துவிடும். பட்டா இல்லாவிட்டாலும் அனுபவ பாத்தியதை இருக்கும் நிலம் வரும்.
கேது பலமிழந்திருந்தால், திருடர்களால் திருட்டு பயம், களவு, தீய பழக்கவழக்கம் வந்துவிடும். கேது பலமிழந்து காணப்பட்டால் கலைவாழ்வில் பின்னடைவுகள் ஏற்படும்.
தோஷப் பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதமிருந்து, பலவகை அன்னமிட்டு, பலவகை மலர்களைத் தூவி, கேது கவசம் ஓதி வழிபட தீமைகள் மெல்ல மெல்ல அகன்றுவிடும்.
துதி
"பலாச புஷ்ப ஸங்காசம்
தாரகாக்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.'
பலாச மலர்போன்ற ஒளிவீசும் விண்மீன்களுக்குத் தலைமையானவரும், ருத்ர குமாரரும் பயங்கரருமான கேது பகவானைத் துதிக்கிறேன்.
காலசர்ப்ப தோஷமுடையவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் விரதமிருந்து, நெய் விளக்கேற்றி, செண்பக மலர்களால் முருகனுக்கு அர்ச்சனை செய்து, துவரை தானம்செய்ய தோஷ நிவர்த்தி உண்டாகும்.
கேது கவசம்
"ஓம் அஸ்ய ஸ்ரீ கேது கவச ஸ்தோத்ர
மஹா மந்த்ரஸ்ய புரத்தர ருஷி: அனுஷ்டுப்
சந்த:/ கேதுர் தேவத/ மம கேது க்ரஹ
பிரஸாத ஸித்யர்தே ஜபே வினியோகம்/
ரமித்யாதி ஷடங்கஹ்ருதயாதி த்யாஸம்
பூர்புவஸ்ஸுவ ரோமிதி திக்பந்தம்.'
கேதுவுக்குரியவை
பால்- அலி; வடிவம்- நெடிய உருவம்; நிறம்- சிவப்பு; ஆடை- பலவண்ணம்; குணம்- கொடியது; நோய்- பித்தம்; திக்கு- தென்மேற்கு; ரத்தினம்- வைடூரியம்; தானியம்- கொள்ளு; மலர்- செவ்வல்லி; சமித்து- தர்ப்பை; வாகனம்- சிங்கம்; உலோகம்- துருக்கல்; தேவதை- விநாயகர்; காரகத்துவம்- ஞானம்; திருத்தலம்- காளஹஸ்தி; உடையவர்- காளஹஸ்தீஸ்வரர்; நைவேத்தியம்- பலவகை அன்னங்கள்.
லக்னத்தில் கேது
இவர்கள் தாழ்ந்த மனப்பான்மையும், தரங்கெட்ட செயலும் உடையவராக இருப்பர். அரசாங்க விரோதமும் அஞ்சாத மனதும் உடையவர் என்பது சாஸ்திர விதி என உணர்த்தப்படுகிறது. ஆனால் இதனை இக்காலத்திற்கு ஏற்றவாறுதான் முடிவெடுக்கவேண்டும். அக்காலத்தில் ராஜவாழ்வு, ராஜயோகம் என்பர். தற்காலம் ராஜாக்களுக்கே மானியம் பறிக்கப்பட்டுள்ளது. எனவே இப்போதெல்லாம் ராஸ்டிரபதி யோகம், பிரதமர் யோகம், முதன்மந்திரி யோகம் என்பதையும் அதன் பலன்களையும்தான் பலனாக எதிர்பார்க்க இயலும். எனவே இங்கே குறிப்பிடப்படுபவை காலத்திற்கேற்ற பலன்கள், பரிகாரங்கள்தான் என்பதை மனதில் பதிவு செய்வோம்.
லக்னத்தில் கேது உள்ளவர்கள் எவ்விதத்திலாவது அசையா சொத்துகளை எதிர்பார்க்கலாம். மகனால் நல்வாழ்வு, உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தக்கவாறே மணவாழ்வு, அரசு வேலையில் ஆடிட்டிங், வருமானவரித்துறை போன்றவற்றில் வாய்ப்புகள் கிடைக்கும். யோகா மாஸ்டராக வழிநடத்தலாம். மெடிட்டேஷன் நற்பலன் தரும்.
கேது இருக்கும் லக்னம் பகை இடமானால் பின்னடைவுகள் வரும். உதாரணமாக, மேஷத்தில் இருந்தால் நெருக்கடி மிகுந்த வேலைகளும், தேவையற்ற அனுபவங்களும், பிறர் தரும் வேதனைகளும் தொடரும். ரிஷப லக்னமென்றாலும் இதே பலனைதான் எதிர்பார்க்க இயலும். கடக லக்னத்தில் கேது என்றாலும் உடல்உபாதைகளும், பின்னடைவுகளும் இருக்கும். பரிகாரமாக, வெள்ளியிலான காப்பு அல்லது பிரேஸ்லெட் அணியலாம். ஒரு சந்தில் கடைசி வீட்டில் குடியிருப்பது கூடாது. சிவப்புநிற கைக்குட்டை எப்போதும் இருப்பது நல்லது. எந்த தருணத்திலும் விநாயகரை மனதில் பதியவைப்பது நல்லது. பொய்சாட்சி கூறுவது கூடாது. நம்மையறியாது செய்திருந்தால், அரசமரத்தில் பழம் உதிரும் காலத்தில், ஏழு பழங்களைத் தண்ணீரில் ஊறவைத்து உலர்த்தி, வெள்ளிக்கிழமை சாப்பிடுவது நல்லது. குங்குமப்பூ பேஸ்ட்டில் திகலமிடுவது நன்று.
"கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி'
என்னும் துதியைக் கூறி விநாயகரை வணங்கலாம். வைடூரிய மோதிரம் அணிதல் நன்று. ஆங்கிலத்தில் "கேட்ஸ்ஐ' (Cats Eye) என்பர். வெள்ளியில் அணிவதும் போதுமானது.
இரண்டில் கேது
அழகாக இருப்பர். பிறரைக் கவரும் பேச்சுத்திறன் இருக்கும். சொந்த சம்பாத்தியமே உயர்வைத்தரும். மாநில அரசு உதவியைப் பெறலாம். கேது இருக்குமிடம் பகை இடமாக இருந்தால் கெடுபலன்தான். பணநெருக்கடி, குடும்ப அமைதியின்மை தொடரும். சாம்பல் நிற எருமைக்குப் புல் தருதல் நன்று. நாகர் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்யலாம். வீட்டில் வடமேற்கு பாகத்தில் ஒரு வெள்ளிக்கிண்ணத்தில் பச்சரிசி இட்டு, அதில் இரண்டு வெண்முத்தை வைத்துக்கொள்வது வாஸ்துப்பலனைப் பெருக்கும்.
ராஹுர் மந்த: கவிர் ஜீவ:
புதோ பௌம ஸ்ரீரவி கால:/-
ஸ்ருஷ்டி ஸ்திதிர் விஸ்வ:
ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்//
என்னும் மந்திரத்தைப் பாராயணம் செய்தால் ராகு- கேது தோஷம் அகலும். காலை, மாலை கூறுவது போதுமானது.
மூன்றில் கேது
மிகச்சிறந்த புத்திசாலிகள். எதையும் சமாளித்து நெடுங்காலம் வாழலாம். அயல்நாட்டிலும் பெயர், புகழை நிலைநாட்டலாம். நல்ல குடும்பம், நல்ல மனைவி, ஆன்மிக ஈடுபாடு யாவும் பெறலாம். கேது இருக்கும் மூன்றாமிடம் பகையிடமானால் தேவையற்று வாதாடும் தன்மை, இதயக்கோளாறு, பயம், முரண்பாடு, மனைவியைப் பிரிதல், தங்கையின் கணவருடன் சண்டை ஏற்படும். மொத்தத்தில் உற்றார்- உறவினர் கெடுதலாகும்.
பரிகாரமாக, ஒரு மெல்லிய தங்கச்சங்கிலியாவது கழுத்தில் தொங்கவேண்டும். நல்ல நாட்களில் புலால் தவிர்க்கவேண்டும். வீட்டின் இறுதி பாகத்தில் இருட்டான அறை கூடாது. வீட்டு வாசல் கிழக்கு அல்லது மேற்குநோக்கி இருக்க வேண்டாம். வயதில் மூத்தோரை நிந்திப்பது கூடாது.
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ
ரத்ந மௌளிர் நிரங்குச/
ஸர்ப்பஹார கடீஸுத்ர:
ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந்//
என்னும் கணபதி ஸ்தோத்திரத்தைச் சொல்லிவந்தால் சர்ப்ப தோஷம் விலகி புத்திர சந்ததி உருவாகும்.
நான்கில் கேது
சிலர் தாயின் போதிய பராமரிப்பு இல்லாத குழந்தையாக வளர நேரும். தாயாருக்கு அசையா சொத்துகள் இருந்தாலும் போராடித்தான் பெறவியலும். உடல் ஆரோக்கியத்தில் ஜீரணம் சார்ந்த வேதனைகள் இருக்கும். சொந்த வீடுகள் இருந்தும் வாடகை வீட்டிலேயே தங்க நேரிடும். அழகிய வதனத்துடன் பிறந்தாலும் பின்னாளில் முகப்பரு போன்ற தோல் வியாதியால் அழகு கேள்விக்குறியாகும்.
பரிகாரமாக, வீட்டில் பேறுகாலங்களில் கருப்பு- வெள்ளை நாய் வளர்ப்பது நன்று. கிணறு இருந்தால் அதில் காய்ச்சாத பால் ஊற்றுவது நல்லது. விரும்பாத பயணங்களைத் தவிர்த்தல் நன்று. குழந்தையை கோவிலில் அர்ச்சனைக்கு கொடுக்கும்போதும், தொட்டிலில் போடும்போதும் வைத்த பெயரையே கூறவேண்டும். கூடவே லக்னத்தையும் கூறவேண்டும். பித்ருக்கள் அடிக்கடி கனவில் வந்தால் ராமேஸ்வரம் போய்வருதல் நல்லது. திங்கட்கிழமை கருடனை தரிசித்தால் துன்பம் விலகும்.
ஐந்தில் கேது
குடும்ப கௌரவம் உங்களால் நிலைநாட்டப்படும். அந்நிய நாடு வரவேற்கும். 54 வயதைக் கடந்ததும் முட்டுவலி, கைகால் வலி தவிர்க்க முடியாதது. குழந்தைகளின் கல்வி சார்ந்த வேதனை, மேஷ ராசியினருக்கு ஏற்படும். பிறர் இவர்களைச் சார்ந்து புறங்கூறி கெட்டபெயர் வாங்க முயற்சிப்பர்.
பரிகாரமாக, 48 வயதுக்கு உட்பட்ட காலத்தில் சொந்த வீடு கட்டுதல் கூடாது. பால், அரிசி, கோவிலுக்கு தானம் தருவது சிறப்பானது. அஸ்வினி, மகம், மூல நட்சத்திரத்தில் பிறந்தோர் கேது தசையில் தினந்தோறும் வரும் எமகண்ட நேரத்தில்,
"ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ காளி ப்ரசோதயாத்'
என்னும் மந்திரத்தைக் கூறுவதால் எண்ணியவை நிறைவேறும்.
ஆறில் கேது
நினைப்பவை யாவும் நடந்தேறிவிடும். கிராமங்களில் இருப்போர் கால்நடை வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம். எந்த உடல் உபாதைகள் வந்தாலும் துரித நிவாரணம் கிடைக்கப்பெறும். திருமணக்காலத்தில் மணமகன் மாமனாரிடம் இலவசமாக மோதிரம் வாங்கி இடது கையில் அணிதல் நல்லது. 43 நாட்கள் கோவிலுக்கு வாழைப்பழம் தருவது சிறப்பைத் தரும். கருப்பு- வெள்ளை நாய் வளர்த்தால் சந்ததிகள் சிறப்பாகும்.
ஏழில் கேது
எந்தவித நன்மைகளையும் எதிர்பார்க்க இயலாது. சதாகாலமும் தூங்கிக்கொண்டிருக்கவே மனம் உந்துதலைத் தரும். கேது, லக்னம் பகை இடமாக அமைந்தால், திருட்டுப் போதல், பிறர் சொத்தை அபகரித்தல் நிகழும்;
உஷார்! பயணங்களில் நிம்மதியற்றதன்மை, மனைவி, மக்களால் தொல்லை ஏற்படும். ஆண்களுக்கு விந்துவில் போதிய கருவாக்கும் தன்மை (கர்ப்பமாக்கும்) இல்லை என்ற குற்றசாட்டை எதிர்கொள்ள நேரிடும்.
ஆபிருப்யகரோ வீர
ஸ்ரீப்ரதோ விஜயப்ரத:/
ஸர்வ வஸ்யகரோ
கர்ப்ப தோஷஹா புத்ரபௌத்ரத://
என்னும் மந்திரத்தைப் பாராயணம் செய்தால், ஆணானால் வம்ச விருத்தி உண்டாகும்; பெண்களுக்கு பேறுகால கஷ்டம் அகலும். விநாயகரை வணங்கவேண்டும்.
எட்டில் கேது
கடும் முயற்சியைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுபவர்கள், அரசு சார்ந்த நன்மைகளை தாராளமாகப் பெறலாம். நீண்டநாள் வாழும் உடல்பலமும் பெறலாம். ஆண்களுக்கு எட்டாமிடம் ஆயுள் ஸ்தானம். எட்டாமிடம்- கன்னி லக்னத்தாருக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்து காணப்படும். வயிறு மற்றும் தொப்புளின் கீழ்பாகம் பின்னடைவுகளைத் தரும். பல்வலி பாடாய்ப்படுத்தும்.
பிறர் தரும் அறிவுரையை மனதில் ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள். உதாரணமாக, நம் முன்னாள் பிரதமர் நரசிம்மராவை ஜாதகரீதியாக எடுத்துக்கொள்ளலாம்.
இவர் 28-6-1921-ல் பிறந்து, 23-12-2004-ல் மறைந்தவர். வாராங்கல்லில் ஜனனம். கன்னி லக்னம். இரண்டில் ராகு; 7-ல் சந்திரன்; 8-ல் கேது, சுக்கிரன்; 10-ல் சூரியன், செவ்வாய், புதன். (உயர்பதவியோடு வாய்மூடி மௌனியாய்- பாபர் மசூதி சார்ந்த தகவல்களுக்கும் மூலகாரணமாக முத்திரை பதித்தவர்). 12-ல் குரு, சனி. அயன சயன விரய ஸ்தானத்தில் சிம்மத்தில் குரு, சனி. எனவே எல்லாவற்றையும் சமாளித்தவர். கேதுவின் பெருமை இதுதான்.
ஒன்பதில் கேது
துரதிர்ஷ்டத்தையும், சோம்பலையும் வளர்ப்பார். தந்தைக்குக் கேடும், தரமிலாச்செயலும் புரியச்செய்வார். தொல்லைகள் மிகுதி என்பது முந்தைய சாஸ்திர விதி. காலத்திற்கேற்ப என்ன பலன் என ஆய்வு செய்வோம். எப்படியும் இவர்களாக முயற்சித்து முன்னேறிவிடுவார்கள். பெற்ற பிள்ளைகளால் பெரிதும் பாராட்டப்படுவார்கள். இவர்கள் பிறந்த பின்னர்தான் குடும்பம் நல்ல நிலைக்கு வந்தது என உணரும்விதமாக கேது ஆதரவு தருவாராம். ஆனால் பகையிடங்களில் இருந்தால் பின்னடைவுகள் வரும். இவர்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம். வீட்டில் தங்கம் சேமிக்க சேமிக்க வாழ்வின் தரம் உயரும். தந்தைவழி சொந்தங்களால் முட்டுக்கட்டைகள் வரலாம்.
பரிகாரமாக, தங்குமிடத்தின் வாசலில், ஒரு குடுவையில் தேன் நிரப்பி தொங்கச்செய்யவும். 45 நாட்களுக்குப்பின் சந்தியில் வீசிவிடல் நன்று. கருப்புநிற நாய் வளர்ப்பது நல்ல பரிகாரம். 48 வயதிற்குள் சொந்த சம்பாத்தியத்தில் வீடு கட்டியிருந்தால் மேலே கூறிய பரிகாரம் தேவை.
பத்தில் கேது
மனோதைரியம், மங்காத புகழையும் தருவார். நல்லவை செய்ய முட்டுக்கட்டைகளையும் தருவார். நல்ல கலைஞராகலாம். வெளிநாட்டிலும் கால்பதிக்கலாம். வெற்றிமேல் வெற்றிவந்து புகழ்பட வாழலாம். பகையிடமான மேஷம், ரிஷபம், கடகம் ஆகியவை லக்னமாக அமையப்பெற்றால் சில பின்னடைவுகள் வரும். சமாளித்து முன்னேறலாம். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பர். எனவே ஒரே ஒரு ஜாதக நகலைப் பார்ப்போம். லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1-10-1902-ல் பிறந்தவர். 8-10-1979-ல் மரணம். கடக லக்னம். லக்னத்தில் செவ்வாய்; 3-ல் சுக்கிரன், சூரியன், ராகு; 6-ல் சனி; 7-ல் சந்திரன், குரு மரகத்தில். சிறந்த தேசபக்தராக வாழ்ந்து மறைந்தவர். 10-ல் கேது மேஷத்தில் தனித்துக் காணப்படுவார். வாஸ்துரீதியாக வீட்டில் தடைகள் தொடர்ந்தால் ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் பாலும் தேனும் கலந்து ஊற்றி, வீட்டு வாசலில் புதைத்துவைப்பது நன்று. வைடூரிய மோதிரம் அணியவும்.
பதினொன்றில் கேது
செல்வச் சேமிப்பு உண்டு. நல்ல பல செயல்களைப் புரிவார். உயர்வான கலை, பேச்சு, கல்வி என எல்லா கோணங்களிலும் புகழடையச் செய்வார். எத்துறையிலும் கவனம் செலுத்தலாம். கேது பகை இடங்களில் இருந்துவிட்டால் ஆண் சந்ததிகள் அல்லல்களுக்கு உள்ளாகும். அத்துடன் நல்ல கிரகநாதர்கள் இணைந்துவிட்டால் நீண்டபுகழ் நிலைத்திருக்க உதவி புரிவார். இதற்குச் சான்றாக ஒரு சாஸ்திர உண்மை. பத்மபூஷன் ருக்மணி அருண்டேல் (நடனக்கலைஞர்) 29-2-1904-ல் ஜனனம். 21-2-1986-ல் மரணம். அவர் பிறந்தது மதுரையில். ரிஷப லக்னம்.
மூன்றில் சந்திரன்; 5-ல் ராகு; 9-ல் புதன், சனி, சுக்கிரன்; 10-ல் சூரியன். மாசி மாதம் பிறந்தவர். 11-ல் புதன், குரு, கேது மூவரும் இணைந்து நல்ல புகழை நிலையாகக் கொடுத்துள்ளனர். தியாசபிக்கல் சொஸைட்டியை நிறுவியவர். அடையாறு ஆலமரம் போல், நல்ல நூல்நிலையம். நடனத்தின்மூலம் சாதனைகள். எனவே கிரகநாதர்கள் சீராக அமைந்துகொண்டால் புகழ்பட வாழலாம்.
பன்னிரண்டில் கேது
கண் பார்வையில் கோளாறுகள், ஈனச்செயல்களில் மனவிருப்பம், அன்பிலா பாச உணர்வுகள் ஆட்கொள்ளும் என்பது சாஸ்திர விதி. காலம் தரும் செய்திகளைப் பார்ப்போம். இவர்களுடைய கண்கள் பெரிதாகவும் அழகாகவும் காணப்படும். நல்ல கல்வித்திறன் இருக்கும். எவரையும் எதிர்த்துப் போராடி ஜெயம் கொள்ளலாம். சிலருக்கு ஆன்மிக நாட்டம் மிகையாகி, வருமானம் புண்ணியத்தை நாடிச்செல்லும். கேது லக்னம் பகையிடமானால், காலிலும் கண்ணிலும் ஆரோக்கியக்குறைகள் தோன்றும்.
நந்த்யோ நந்தி ப்ரியோ
நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:/
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ
நித்ய நித்யோ நிராமய://
என்னும் மந்திரத்தைப் பாராயணம் செய்தால் கணபதி அருள்புரிவார். உடல் உபாதை நீங்கும். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியினுடைய பிறந்த தினம் 19-11-1917. மறைந்த தினம் 30-10-1984. கடக லக்னம், மகர ராசி. லக்னத்தில் சனி; 12-ல் கேது. 2-ல் செவ்வாய்; 5-ல் சூரியன், புதன். கார்த்திகை மாதம் பிறந்தவர். 6-ல் சுக்கிரன், ராகு; 7-ல் சந்திரன். களத்திர ஸ்தானமான சந்திரனுக்கு 7-ல் சனி- பெரோஸ்காந்தியை மணம்முடித்து வைத்தது. அவரின் துயரமுடிவுக்குக் காரணம் எட்டுக்குடையவர் லக்னத்தில் இருந்தது என்பதுதான். எனவே கிரகநாதர்கள் தத்தம் கடமைகளைச் செய்துமுடிக்கத் தயங்குவதில்லை.
நவகிரகப் பிரார்த்தனை
ஆதவன் சுகமும் சந்திரன் புகழும்
அங்காரகனாகிய பூமி சுதன் நிதியும்
மாதவ புதனறிவும் குரு கௌரவமும்
வழங்கிட சுக்கிரன் வாக்கதும் வழங்க
சாதனை மகிழ்வை சனியவர் நல்க
சக்தியாம் வலிமையை ராகு வழங்கிட
ஓதிடும் புலமை கேதுவே நல்க
உலகில் மானுடம் வாழ்க எந்நாளும்.
செல்: 93801 73464